ரூமஸ்ஸலா மலையுச்சியில் ஒரு மர்மக் கோபுரம்

காலியில் உள்ள ரூமஸ்ஸலா மலையின் (மருத்துவ மலை) உயரமான ஓரிடத்திலே காம்பீரமாக எழுந்து நிற்கும் கருநிறமான ஒரு கோபுரத்தைக் காணச் சென்றோம். 
பழைமை வாய்ந்த இக்கோபுத்தின் உயரமோ 60 அடிகளைத் தாண்டி நின்றது. பார்ப்பவர்கள் மனங்களில் திகிலை உருவாக்கும் இந்த இராட்சதக் கோபுரம் எதற்காக எப்போது அமைத்தார்கள் என்ற கேள்விக் கணைகளோடு தன்பாட்டில் மேலெழுந்து நிற்கிறது. 
1875 ஆம் ஆண்டளவிலே கட்டப்பட்டதாக நம்பப் படும் இக்கோபுரமானது போலியானதொரு கலங்கரை விளக்காய் கட்டப் பட்டதாகவும் சர்வதேச கப்பல் மார்க்கத்தினூடாக ஊடுறுவிச் செல்லும் அல்லது காலி துறைமுகம் நோக்கி வரும் கப்பல்களை ஏமாற்றுச் சமிக்ஞைகள் மூலம் ஏமாற்றி கற்பாறைகளில் மோதச் செய்வதற்காகவே இக்கோபுரம் அமைக்கப் பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது. 
காலி துறைமுகத்தின் உண்மையான கலங்கரை விளக்கம் காலிக் கோட்டையின் தென்கோடிக் கரையிலே அமைக்கப் பட்டுள்ளதோடு இத்துறைமுகம் நோக்கி வரும் நட்புக் கப்பல்களுக்கு சரியான திசையை அறிவிக்கும் நோக்கோடு கோட்டைக் கலங்கரை விளக்கம் செயல்படுத்தப் படுவதோடு எதிரிகளின் கப்பல்கள் என்று தெரியவரும் பட்சத்தில் கோட்டைக் கலங்கரை விளக்கம் அணைக்கப் பட்டு மேற்சொன்ன ரூமஸ்ஸலாவின் போலிக் கலங்கரை விளக்கத்தில் வெளிச்சம் ஏற்றப்படும். 
அவ்வேளையில் எதிரிகளின் கப்பல்கள் ரூமஸ்ஸலா மலையடிவாரத்தில் உள்ள “”போனவிஸ்டா “” முருகைக் கற்பாறைகளில் சிக்கி சேதத்திற்கு உட்பட்டு கடலில் மூழ்கி விடும். 
இக்கோபுரம் பற்றி இன்னுமொரு கருத்து நிலவுகிறது அதாவது நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இக்கோபுரம் வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
1921 ஆம் வருடத்தில் இக்கோபுரத்தை ஆராய்ச்சி செய்த ஆர். எல். ப்ரோஹியர் என்பவர் சொல்லும் போது திருகோண வடிவில் அமையப் பெற்ற இந்த இடத்தில் அமையப் பெற்ற இக்கோபுரம் நிலஅளவை நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார். 
இக்கோபுரத்தில் தற்போது ஒரு வெளிச்சவீடு இல்லாவிட்டாலும் கடல்மார்க்கமாகப் பயணிக்கும் மீனவர்களுக்கு இக்கோபுரம் தெளிவாகத் தெரிவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 
இக்கோபுரமானது இது வரை காலமும் செப்பனிடாத காரணத்தால் இது இடிந்து விழும் நிலையில் காணப்படுவதை அங்கு போய் ஆராய்ந்த நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. 
✍🏼கலைமணாளன் ஹிஷாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *